01 (1)

மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதவகையில் அவர்களது இயல்பு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவமளித்து உமா ஒயா திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

உமா ஒயா திட்டம் காரணமாக பிரதேச மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சிவில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில் உமா ஒயா திட்டத்தின் காரணமாக ஊவா மாகாண மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

சம்பந்தப்பட்ட அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடி மக்களின் வீட்டுப் பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் இத்திட்டம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு நோர்வே நாட்டின் நிபுணர்கள் குழு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் வாரத்தில் இலங்கைக்கு வருகைதரவுள்ள அதேவேளை ஜெர்மன் நாட்டு விசேட நிபுணர் ஒருவர் இது தொடர்பாக தற்போது ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்களுடைய கருத்துக்கள், முன்மொழிவுகளுக்கேற்ப பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதுடன், ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இத்திட்டத்தை முன்கொண்டு செல்வது தெரடர்பாக கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர்களான மஹிந்த அமரவீர, ஹரீன் பெர்ணாந்து, விஜித் விஜேமுனி சொயிசா, ஊவா மாகாண அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண சபை உறுப்பினரும் உமா ஒயா பல்நோக்கு அழிவுத்திட்டத்திற்கு எதிரான மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சமந்த வித்தியாரத்ன, மகாவலி, சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்