1

இந்நாட்டின் பிரிவெனா கல்வியை வலுப்படுத்தி அதன் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆற்றப்படும் பணிகள் தேசிய பௌத்த புத்தி ஜீவிகள் சபையின் பாராட்டுக்குள்ளாகியுள்ளன.

தேசிய பௌத்த புத்தி ஜீவிகளின் சபை இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஒன்றுகூடிய சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

பிரிவெனா கல்வியை முன்னேற்றி அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டங்கள் குறித்து பிரிவெனா பணிப்பாளர் பேராசிரியர் வண. நாபிரித்தன்கடவர ஞானரத்தன தேரர் ஜனாதிபதி அவர்களிடம் தனது நன்றியை தெரிவித்தார்.

விகாரைகளை மையப்படுத்திய பேண்தகு அபிவிருத்தி செயற்திட்டம் ஒன்றினை உருவாக்குதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் சர்வதேச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தம்ம பாடசாலை கல்வி முறைக்கான விடயதானத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் முறைமைப்படுத்தல் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டதுடன், எமது எதிர்கால சந்ததியினரை சிறந்தவொரு சமுதாயமாக கட்டியெழுப்புவதற்கு தம்ம பாடசாலை கல்வியினை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கையை தேரவாத பௌத்த மத்திய நிலையமாக கட்டியெழுப்பி சம்புத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்கு அரசாங்கம் என்ற வகையில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் பிக்கு மாணவர்களுக்கான தானத்தை தயார் செய்வதற்கு லிட்ரோ நிறுவனத்தின் ஊடாக வாயு அடுப்புடன் கூடிய சமையல் எரிவாயு தொகுதியை பொருத்துதல் மற்றும் சமையல் எரிவாயு சிலின்டர்களை பெற்றுக்கொடுப்பதற்குமான செயற்திட்டத்திற்குரிய கடிதங்களை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்