01 (54)

புதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தி உள்ளூராட்சி சபை தேர்தல்களை இவ்வருடத்திற்குள் நடத்த முடியுமென தான் நம்புவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை நோக்கி உருவாக்கப்பட்ட மார்ச் 12 இயக்கம் தேர்தல் வாக்காளர்களை தெளிவூட்டுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆரம்பித்த அறிவூட்டல் செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்வு இன்று (07) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் புதிய உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் முறை அன்று உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் ஆணைக்குழு தனது கடமைகளை சரிவர மேற்கொள்ளாதமையின் பெறுபேறுகளையே இன்று நாம் அனுபவிக்கிறோம் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இந்த தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் செயற்பாடுகள் பக்கச்சார்பின்றியும், சுயாதீனமாகவும் நடைபெறாமையே உள்ளூராட்சி சபை தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான பிரதான காரணமாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மீண்டும் குழுவொன்றினை நியமித்து தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் இவ்விடயம் தொடர்பாக எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய அரசியல் மற்றும் சமூக மறுசீரமைப்புகளுக்கு அவசியமான தொடக்கமாக இதனை தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.

நாட்டிலும், சமூகத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களின் தொடக்கமே இது என தான் கருதுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட விருப்பு வாக்கு முறையினால் கட்சிகளின் அரசியல் கொள்கைகள் மற்றும் தத்துவங்கள் மறைக்கப்பட்டு தனிநபர்களின் செல்வாக்கு மேலோங்கியது என்றும், புதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறை மற்றும் தொகுதி முறை தேர்தல் என்பன நாட்டு மக்களின் வெற்றி என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினை நாட்டின் மாற்றத்திற்கான யுகமொன்றின் ஆரம்பம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் 18 ஆவது திருத்தத்தின் ஊடாக இந் நாட்டின் அரசியலமைப்பில் மன்னராட்சி போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டமையினாலேயே 19 ஆவது திருத்தத்தினை மேற்கொள்ள நேர்ந்தது​ என்று நினைவூட்டியதுடன், நீதிபதிகள், சட்டத்தரணிகள், பொலிஸ்மா அதிபர், தேர்தல் ஆணையாளர் மற்றும் ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட நாட்டின் பொறுப்பு வாய்ந்த சுயாதீன பக்கச்சார்பற்ற பதவிகளுக்காக உரியவர்களை நியமிக்கும் தனி அதிகாரம் அன்று ஜனாதிபதிகே இருந்தது என்றும் தெரிவித்தார்.

இவ்வாறான நிலைமையில் மக்கள் மேற்கொண்ட எதிர்ப்புக்களின் பெறுபேறாகவே 19 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

“புதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவோம்” எனும் தலைப்பில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மார்ச் 12 இயக்கத்தின் பிரதிநிதிகள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.

02 (42)

03 (36)

04 (29)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்