Presidential Media Unit Default Banner

மகிந்த தேரர் இலங்கைக்கு எழுந்தருளிய புண்ணியமிக்க பொசன் பௌர்ணமியை முன்னிட்டு பல பௌத்த சமய நிகழ்வுகள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜூன் 08, 09, 10 ஆகிய மூன்று நாட்கள் பொலநறுவையில் நடைபெறவுள்ளது.

 

பொலநறுவை பௌத்த சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 57 ஆவது பண்டாரநாயக்கா – சேனநாயக்கா பொசன் அன்னதான நிகழ்வு ஜூன் 08, 09 திகதிகளில் பொலநறுவை பராக்கிரம சமுத்திரத்துக்கு அண்மையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்படும்.

 

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு வழிபாட்டுக்காக வருகைதரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்காக பொலநறுவை பௌத்த சங்கத்தின் தலைவரான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது ஆலோசனைக்கமைய இந்த அன்னதானம் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

 

ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நாட்டிலுள்ள முக்கியமான விகாரைகளை மையப்படுத்தி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது பங்குபற்றுதலுடன் நடைபெறும் ‘சதகம் யாத்ரா’ தர்ம போதனைத் தொடரின் பொசன் பௌர்ணமி நிகழ்வு மெதிரிகிரிய வட்டதாகெயவில் நடைபெறவுள்ளது.

 

நாட்டின் சிறப்பான பொசன் நிகழ்வாக ‘புலதிசி பொசன் உதானய’ நிகழ்வு 08, 09, 10 ஆகிய திகதிகளில் வரலாற்று பெருமைமிக்க பொலநறுவை கல்விகாரையை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. நெல்லிகல ரஜமகா விகாரையிலிருந்து கொண்டுவரப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள புனிதப் பொருட்களை மக்கள் தரிசனத்துக்காக திறந்து வைக்கும் நிகழ்வு பொசன் பௌர்ணமி தினத்தன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதி அவர்களது தலைமையில் இடம்பெறும்.

 

வணக்கத்துக்குரிய தேரர்களின் ஆலோசனைக்கமைய கௌரவ ஜனாதிபதி அவர்களது முழுமையான வழிகாட்டலில் பொலநறுவையை ஒளிரச்செய்யும் புலதிசி பொசன் நிகழ்வோடு இணைந்ததாக முப்படையினர், சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலீஸ் உள்ளிட்ட நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ள 75 பாரிய வெளிச்சக் கூடுகளுடனான பொசன் வலயத்தில் பக்தி கீதமும் இடம்பெறும்.

 

வரலாற்று பெருமைமிக்க பொலநறுவை பொசன் பெரஹரா ஜூன் 09 ஆம் திகதி இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் வடதாகெயவுக்கு அண்மையில் ஆரம்பமாகும். வண. வெண்டருவே உபாலி தேரர் உள்ளிட்ட தேரர்கள், மாவட்டத்தின் அரச நிறுவனங்கள், பொலநறுவை விவசாயிகள், தொண்டர் அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரின் முழுமையான பங்களிப்புடன் இந்த பெஹகரா வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

 

சமய அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை அளித்து, மக்களுக்கு ஆசீர்வாதம் வேண்டி அனைத்து சமய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்