13

மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமசக்தி மக்கள் இயக்கம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதுப்பொலிவுடனும் புத்தெழுச்சியுடனும் நடைமுறைப்படுத்தப்படுமென்று ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்

 

தற்போது கிராமசக்தி மக்கள் இயக்கம் நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அதிக வசதிகளை வழங்குவதையும் சுயமாக எழுந்து நிற்கும் கீர்த்திமிக்க பிரஜைகளை உருவாக்குவதையும் நோக்கமாகக்கொண்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் விரிவாகவும் வினைத்திறன்மிக்கதாகவும் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

ஜனவரி 23ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான காலப்பகுதி கிராமசக்தி வாரமாக பிரகடனப்படுத்தப்படும் என்றும் அவ்வாரத்தில் இந்த நிகழ்ச்சித் திட்டத்துடன் மக்களை அணிதிரட்டும் பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

 

இன்று (20) முற்பகல் அநுராதபுரம் உள்ள மாகாண சபை கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் வட மத்திய மாகாண செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

 

வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய நிகழ்ச்சித் திட்டமாக கிராமசக்தி மக்கள் இயக்கம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கிராமசக்தி மக்கள் இயக்கம் தங்கிவாழும் மனோநிலையிலிருந்து விடுபட்டு மக்கள் சுயமாக எழுந்திருப்பதற்கான சரியான வழிகாட்டலையும் உதவிகளையும் வழங்கும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தனியார் துறையினரின் பங்களிப்புடன் இத்திட்டம் தற்போது மிகவும் வறிய நிலையிலுள்ள மக்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளை இலக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

 

அரச துறை, தனியார்துறை, மக்கள் ஆகிய மூன்று பிரிவினர்களுக்குமிடையிலான ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்தி தற்போது கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை 1000 இற்கும் அதிகமாகும். இப்பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை 1020க்கும் அதிகமானதாகும். இவற்றில் 700 பிரிவுகள் வறுமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன். அவை தற்போது சமூக நிர்வாக கிராமங்களாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மேலும் 300க்கும் அதிகமான கிராமங்கள் உற்பத்தி மற்றும் சேவைகளை அடிப்படையாகக் கொண்ட கிராமங்களாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தற்போது இந்த கிராமசக்தி சங்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்காக 1000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

அடுத்த வருடத்தில் இதனை 4000 கிராமசக்தி சங்கங்கள் மற்றும் நிறுவனங்களாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதுடன், இதுவரை நாட்டில் முக்கிய பல நிறுவனங்கள் கிராமசக்தி மக்கள் இயக்க சங்கங்களுடன் ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளதன் மூலம் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

மாகாண அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினரதும் பங்குபற்றலில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தின்போது, கிராமசக்தி மக்கள் இயக்கம் வட மத்திய மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விதம், அதன் முன்னேற்றம் மற்றும் எதிரகால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

தற்போது அநுராதபுரம் மாவட்டத்தில் வறுமை நிலை 3.8 சதவீதமாகக் காணப்படும் அதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தின் வறுமை நிலை 2.2 சதவீதமாகும். அம்மக்களுக்கு அதிக நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் புதிய திட்டங்களை உருவாக்குமாறு ஜனாதிபதி அவர்கள் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

வட மத்திய மாகாணத்தின் கிராமசக்தி மக்கள் அமைப்புகள் மற்றும் தனியார் நிறவனங்களுக்கு இடையிலான 04 புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது கைச்சாத்திடப்பட்டன. கிராமசக்தி மக்கள் அமைப்புகளின் உற்பத்திகளை கொள்வனவு செய்தலுடன் தொடர்பாகவே இந்த உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், மத்திய நுவரகம்பலாத, விகாரகங்வில பிரதேச செயலாளர் பிரிவின் கிராமசக்தி மக்கள் சங்கத்திற்கு யோகட் பொதியிடல் இயந்திரமொன்றினை கொள்வனவு செய்வதற்காக 20 இலட்ச ரூபாவும் கெபெதிகொல்லேவ மக்கள் அமைப்பிற்கு 10 இலட்ச ரூபாவும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

அத்துடன், கிராமசக்தி மக்கள் சங்கங்களிற்காக வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளும் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்ட செயலாளர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன. அதற்கமைய அனுராதபுரம் மாவட்டத்திற்கு 66 மில்லியன் ரூபாவும் பொலன்னறுவை மாவட்டத்திற்கு 21 மில்லியன் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டன.

அமைச்சர் பீ.ஹெரிசன், முன்னாள் அமைச்சர்களான எஸ்.எம்.சந்ரசேன, வீரகுமார திசாநாயக்க, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், கிராமசக்தி மக்கள் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும் அநுராதபுரம், பளுகஸ்வெவ, ஆசிரிகம கிராமத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். கிராம மக்கள் ஜனாதிபதி அவர்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றதுடன், மிகவும் குறைந்த வசதிகளுடன் குறைந்த வருமானம் பெறும் மக்களைக் கொண்ட அக்கிராமத்தில் கிராமசக்தி மக்கள் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், ஆசிரிகம இசிபத்தனாராம விகாரையில் கிராமசக்தி பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

 

மக்கள் தமது அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கியதுடன், குடிநீர் பிரச்சினை, காட்டு யானைகள் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை, சுகாதார வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் காணி பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களிடம் விடயங்களை முன்வைத்தனர். இந்த பிர்ச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக்கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், இதற்கான ஆரம்ப கட்டமாக அடுத்த வாரத்திற்குள் 250 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

 

பாடசாலைகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் அதிபர்கள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர். அப்பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்குமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், குளங்களின் புனரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் நுழைவு வீதி நிர்மாணப் பணிகளுக்கு முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.

 

கிராமத்தில் மிகவும் குறைந்த வசதிகளைக் கொண்ட வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு தனியார்துறை திட்டமொன்றின் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

இந்த அனைத்து நடவடிக்கைகளினதும் முன்னேற்றத்தை கண்டறிவதற்காக இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இக்கிராமத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

பிரதேசத்தின் இரண்டு முன்பள்ளி பாடசாலைகளின் அபிவிருத்திக்காகவும் சேவை இல்ல நிர்மாணத்திற்காகவும் ஜனாதிபதி அவர்களினால் நிதி ஏற்பாடுகள் வழங்கப்பட்டதுடன், பளுகஸ்வெவ, ஆசிரிகம கிராமத்தின் கிராமசக்தி சங்கத்திற்கான நிதி ஏற்பாடுகளும் ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

 

நீண்டகாலமாக தமது எதிர்பார்ப்பாக இருந்த அபிவிருத்தியை தமக்கு பெற்றுத்தருவதற்கு நடைமுறை ரீதியான நிகழ்ச்சித்திட்டமொன்றின் மூலம் நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி அவர்களுக்கு இதன்போது பிரதேசத்தில் உள்ள மகாசங்கத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

01

02

04

05

07

08

09

10

11

12

13

01

02

03

05

06

07

08

09

10

11

12

13

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்