2

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பிரதான தடைகளாக ஊழல், மோசடி ஆகியவற்றை போன்றே மக்கள் பிரதிநிதிகள் தமது பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்றாமையும் காணப்படுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

தேர்தல் மேடைகளில் எத்தகைய கருத்துக்களை தெரிவித்த போதிலும் பாராளுமன்ற தினங்களில் பாராளுமன்றத்திற்கு செல்வதற்கோ அல்லது மாகாண சபை மற்றும் பிரதேச சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கோ மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மக்கள் பிரதிநிதிகள் அக்கறை செலுத்தாது உள்ளதோடு, அதனால் நாட்டு மக்களின் பிரச்சினைகள் பற்றிய சரியான புரிந்துணர்வை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

 

பொலன்னறுவை மாநகர சபையின் புதிய கட்டிடத்தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (10) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

 

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், தேர்தல் நடவடிக்கைகளின்போது கட்சி பேதங்களோடு செயற்பட்டபோதிலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவற்றை மறந்து, ஒற்றுமையோடு மக்கள் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு அப்பால் நகரபிதாக்களுக்கும் பிரதேச சபை தவிசாளர்களுக்கும் நிறைவேற்று அதிகாரம் காணப்படுவதோடு, உள்ளூராட்சி மன்றங்களால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என்பதோடு, உள்ளூராட்சி மன்ற சட்டங்களின் ஊடாக உள்ளூராட்சி நிறுவனங்கள் மக்களின் நலனுக்காக எந்தவொரு விடயப் பரப்பின் ஊடாகவும் அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான அதிகாரம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது நினைவுறுத்தினார். ஆகையினால் தனது அதிகாரங்களை நாட்டு மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்க வேண்டியது சகல மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.

 

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 190 மில்லியன் ரூபாய் செலவில் சகல வசதிகளையும் கொண்டதாக இந்த புதிய மாநகர சபை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை மக்களின் பாவனைக்காக கையளித்த ஜனாதிபதி அவர்கள் அதனை பார்வையிட்டார்.

 

அமைச்சர்கள் வஜிர அபேவர்த்தன, வசந்த சேனாநாயக்க வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்ன, பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

 

 

இதனிடையே பொலன்னறுவை பொலிஸ் தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் கட்டிடத் தொகுதியையும் ஜனாதிபதி அவர்கள் இன்று திறந்து வைத்ததோடு, அதனை பார்வையிட்டார்.

 

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் இடம்பெறும் வன்முறைகளை ஒழிப்பதற்கு சட்ட ரீதியான பாதுகாப்பு மாத்திரமன்றி எமது கலாசார பழக்கவழக்கங்களோடு இணைந்ததாக தமது பொறுப்புக்கள் மற்றும் சிறந்த வாழ்க்கை முறை தொடர்பாக சமூக எண்ணங்களை மாற்றுதலும் அத்தியாவசியமாகுமெனத் தெரிவித்தார். அத்தோடு சட்டத்தை விட கலாசார பழக்கவழக்கங்கள் பலம் மிக்கவை எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

பொலிஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை ஜனாதிபதி அவர்கள் நாட்டினார்.

 

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

 

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 501 இலட்ச ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கதுறுவெல புதிய பஸ் தரிப்பு நிலையத்தை ஜனாதிபதி அவர்கள் இன்று மக்களின் பாவனைக்காக திறந்துவைத்தார்.

 

ஊடகவியலாளர்களுக்கு இலவச பிரயாண சீட்டுக்களை வழங்கும் செயற்திட்டமும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடமத்திய மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி விஜிதகுமார உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

1

3

4

5

7

8

9

11

12

13

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்