Presidential Media Unit Default Banner

இயற்கை அனர்த்தங்களின் போதும், பல்வேறு மோசடி செயற்பாடுகளாலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மண்ணரிப்பை தடுத்து மண்வளத்தை பாதுகாப்பதற்காக மண்வள பாதுகாப்பு சட்டத்தை வினைத்திறனாக அமுல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

 

இன்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற மண்வளம் பேணல் சபை அலுவலர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்படி கருத்தை தெரிவித்தார்.

 

அனுமதியற்ற மணல் மற்றும் மண் கடத்தல் காரணமாக கங்கைகள் மற்றும் ஆற்றங்கரைகளில் ஏற்படும்   மண்ணரிப்பு காரணமாக நீர்மூலங்கள் தடைப்பட்டுள்ள மோசமான நிலை தொடர்பிலும் அலுவலர்களின் கவனத்தை ஈர்த்த ஜனாதிபதி அவர்கள் அந்த நிலையை தவிர்ப்பதற்காக சட்டத்தை பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.

 

அத்துடன் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணங்களின் போது  மலைகளில் ஏற்படும் மண்சரிவை தவிர்ப்பதற்காக பாவிக்கப்படும் தொழில்நுட்பத்திலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் அது தொடர்பான எதிர்கால திட்டமிடலின்போது மண்ணரிப்பை தடுப்பதற்கு  முதன்மை கவனம் செலுத்தி திட்டங்களை அமுல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.

 

மத்திய மலைநாட்டில் மட்டுமன்றி நாடு முழுவதும் மண்ணரிப்பை தடுப்பதற்கான திட்டங்களை  வினைத்திறனாக அமுல்படுத்துமாறும், சட்ட அதிகாரங்களை மாவட்ட செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான சுற்றறிக்கைகளை அனுப்புமாறும், அடுத்த மாதம் 06 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் தேசிய உணவுற்பத்தி மறுமலர்ச்சி திட்டத்தோடு இணைந்ததாக மண்ணரிப்பை தடுப்பதற்காகவும் தெளிவுபடுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்கள், அலுவலர்களுக்கு ஆலோசனை தெரிவித்தார்.

 

1951 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க மண் பாதுகாப்பு கட்டளை சட்டம், 1996ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க மண் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டுள்ளது. மண்ணின் உற்பத்தித்திறனை அதிகரித்தல், மண்வளத்தை பாதுகாத்தல், மோசமடைந்துள்ள மண்வளத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வருதல், வெள்ளம் உவராதல், நீர் தேங்குதல் மற்றும் வறட்சியினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நிலத்தைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.

 

அதன் கீழ் நிறுவப்பட்டுள்ள மண்வளம் பேணல் சபை இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கூடியுள்ளதுடன், அடுத்த தலைமுறைக்காக மண்வளத்தை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக சபையின் நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுக்க வேண்டியதன் தேவையை குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், ஆறு மாதத்திற்கு ஒரு தடவை தனது தலைமையில் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யுமாறும் ஆலோசனை வழங்கினார்.

 

விவசாய அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அனைத்து நிறுவனத்தின் அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் இணைந்துகொண்டனர்

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்