01

எதிர்வரும் மே மாதத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தின வைபவத்திற்கு சமகாலத்தில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள பௌத்த பல்கலைக்கழகத்தின் நிர்மாணப்பணிகளுக்கு 2 – OR என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் அனுசரணை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் மற்றும் அவுஸ்திரேலிய ஒரியன்டல் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் Jun Hong Lu உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இலங்கையில் பௌத்த மதச் செயற்பாடுகளின் வளர்ச்சிக்காக தமது நிறுவனத்தின் ஊடாக வழங்கப்படக்கூடிய பங்களிப்பு தொடர்பாக பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதியிடம் வினவியதுடன், 40 உலக நாடுகளின் பௌத்தமத நலன்புரி சங்கங்களுடன் இணைந்து தமது நிறுவனம் செயற்படுவதுடன், பௌத்த மதத்தை உலகம் பூராகவும் பரவச்செய்வதே தமது குறிக்கோளாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் விசேடமாக இளைய தலைமுறையினருக்கிடையே பௌத்த மதத்தை பரவச்செய்து அவர்களை ஆன்மீக ரீதியில் உயர்த்துதல் தமது நிறுவனத்தின் முதன்மையான குறிக்கோள் என்றும் தெரிவித்தனர்.

பௌத்தமத கோட்பாடுகளுக்கேற்ப சிறந்த, ஒழுக்கப்பண்புகளுடன் கூடிய இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதே தமது அரசாங்கத்தினதும் நோக்கமாகும் என்று ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

பொலன்னறுவை நூதனசாலையை நிர்மாணிப்பதற்காக அனுசரணை வழங்குவதற்கும் இதன்போது Jun Hong Lu அவர்கள் விருப்பம் தெரிவித்ததையடுத்து, அது தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் தனது நன்றியை தெரிவித்தார்.

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்