Presidential Media Unit Default Banner

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களுக்குமிடையிலான தனிப்பட்ட தொடர்பே ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு இலங்கை தலைவருக்கு அழைப்பு விடுக்க காரணமானது என மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதுவர் சமன் வீரசிங்க தெரிவித்தார். கடந்த வருடம் இந்தியாவின் கோவாவில் இடம்பெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் இரண்டு தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர். அச்சந்திப்பின்போது இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலில் ஏற்பட்ட நட்புறவின் காரணமாக மொஸ்கோ திரும்பிய ஒரு சில நாட்களிலேயே ஜனாதிபதி புட்டின் உத்தியோகபூர்வ விஜயத்திற்கான எழுத்துமூல அழைப்பை விடுத்திருந்தார்.

 

நாளை (23) இடம்பெறவுள்ள இருதரப்பு கலந்துரையாடல்கள் இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையில் நெருங்கிய கூட்டுறவுக்கான ஒரு புதிய யுகத்தை ஆரம்பித்து வைக்குமென தூதுவர் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.

 

நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை தலைவர் ஒருவர் ரஷ்யாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று மார்ச் (22) மொஸ்கோ சென்றடையவுள்ளார். கடைசியாக இலங்கையிலிருந்து 1974ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் அவர்கள் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் Igor Morgulov மற்றும் உயர் அதிகாரிகள், இலங்கை தூதுவர் சமன் வீரசிங்க, தூதரக அதிகாரிகள் மொஸ்கோவில் உள்ள Domodedovo சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதி அவர்களை வரவேற்க உள்ளனர்.

 

இரண்டு நாடுகளும் சக்திவளம், வர்த்தகம், விவசாயம் கல்வி, நிதித்துறை மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவாக்குவது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளனர் என தூதுவர் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் இவ்விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவையும் இருதரப்பு வர்த்தக உறவுகளையும் மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி சிறிசேன அவர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், பிரதமர் Dimitri Medvedev மற்றும் கிரம்லினில் உள்ள ஏனைய தலைவர்களையும் சந்திக்க உள்ளார். மொஸ்கோவில் உள்ள அறியப்படாத படைவீரரின் கல்லறையில் மலர் வளையம் வைக்கவுள்ளார். மேலும் இருநாடுகளுக்குமிடையில் இருதரப்பு உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்