10

நான்கு தசாப்தங்களின் பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை இன்று (08) முற்பகல் சுபவேளையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மக்களிடம் கையளித்தார்.

ரஜரட்ட மக்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்குமான தட்டுப்பாட்டினை நீக்கி அம்மக்களின் பல வருடகால கண்ணீர் கதையை நிறைவு செய்யும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மொரகஹகந்த பாரிய நீர்ப்பாசன செயற்திட்டம் 21 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய நீர்ப்பாசன ஆச்சரியமாக கருதப்படுகின்றது.

மகாவலி திட்டத்தின் ஐம்பெரும் நீர்த்தேக்கங்களுள் இறுதி நீர்த்தேக்கமான மொரகஹகந்த செயற்திட்டத்தினால் 03 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிதாக பயிர் செய்து 15 இலட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தைப் பெறுவதுடன், 03 இலட்சம் குடும்பங்களுக்கும் மேற்பட்டோர் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வர். தற்போது பூரணமாக நீர் நிரம்பியுள்ள இந்நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்க் கொள்ளளவு 06 இலட்சத்து 60 ஆயிரம் கனஅடிகளாகும். இது பராக்கிரம சமுத்திரத்தின் நீர்க் கொள்ளளவினைப் போன்று ஆறு மடங்காகும்.

ரஜரட்ட விவசாய மக்களுக்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் நீண்டகால கனவான மொரகஹகந்த செயற்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் 2007 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் போதியளவு அரச அனுசரணை கிடைக்காமை காரணமாக அந்த பணிகள் தாமதமடைந்தன. 2015 ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தனிப்பட்ட அர்ப்பணிப்பும் முயற்சியும் காரணமாக இச்செயற்திட்டம் துரிதப்படுத்தப்பட்டது.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து மொரகஹகந்த நீர்ப்பாசன செயற்திட்டத்தை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள், அதன் பின்னர் மகா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை திறந்துவைத்து மங்கள நீரோட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

சினோஹைட்ரோ சீன நிறுவனத்தினால் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்திட்டம் இதன்போது உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதுடன், மக்கள் சீன குடியரசின் பதில் தூதுவர் பங் சுன்ஷூங் இதற்கான பத்திரத்தை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

25 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புக்கு ஒன்றுசேர்க்கும் நீர் மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நக்கள்ஸ் மலையுச்சியில் இருந்து கடலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் அம்பன் ஆற்றுக்கு குறுக்காக மொரகஹகந்த நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், மொரகஹகந்தைக்கு அண்மையில் பாய்ந்து செல்லும் களுகங்கைக்கு குறுக்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய நீர்த்தேக்கத்தின் நீரும் மொரகஹகந்தைக்கு பெறப்படுகின்றது. இலங்கையில் உள்ள கற்கள் நிரப்பப்பட்ட பிரதான அணைக்கட்டு, கொங்கிரீட் அணைக்கட்டு மற்றும் மண் நிரப்பப்பட்ட அணைக்கட்டு என மூன்று அணைக்கட்டுகளைக் கொண்டு இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரேயொரு நீர்த்தேக்கம் மொரகஹகந்த நீர்த்தேக்கமாகுமென்பது விசேட அம்சமாகும்.

மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்தின் கீழ் வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் 2000 பெரிய மற்றும் சிறிய குளங்களுக்கு நீர் வழங்கப்படும். அதற்கமைய வடமேல் மாகாணத்தின் 303 குளங்களுக்கும் வடமத்திய மாகாணத்தின் 1600 குளங்களுக்கும் நீர் வழங்கப்படுவதோடு புதிய லக்கல மற்றும் மெதிரிகிரிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய நகரப் பிரதேசத்தில் 48 குளங்கள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்த செயற்திட்டம் காரணமாக நாவுல மற்றும் லக்கல பிரதேச செயலகப் பிரிவுகளில் இடம்பெயர்ந்துள்ள 3500 குடும்பங்கள் தற்போது மீள்குடியமர்த்தப்பட்டு வருவதுடன், அவர்களது உடைமைகள் இழக்கப்பட்டமைக்கு நட்டஈடு வழங்கப்படுகின்றது. மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணம் காரணமாக வருடாந்தம் 3000 தொன் நன்னீர் மீன் உற்பத்தி பெற்றுக்கொள்வதனூடாக 225 மில்லியன் ரூபாவினை வருமானமாக பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்டிய பிரதேசங்களில் வருடாந்தம் அதிகமான மழை வீழ்ச்சி பெறப்படுவதுடன் இந்த பாரிய நீர் வீணாக கடலை சென்றடைவதைத் தடுத்து நீர்த்தேக்கத்தில் தேக்கி வைக்கப்படுவதனால் மனம்பிட்டிய மற்றும் சோமாவதிய பிரதேசங்களில் வருடாந்தம் ஏற்படும் வெள்ளப்பெருக்கினை குறைத்துக்கொள்ளவும் இந்த செயற்திட்டத்தின் ஊடாக வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று மாகாணங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்களுக்கு நேரடி பொருளாதார நன்மைகளை வழங்கும் மொரகஹகந்த – களுகங்கை நீர்ப்பாசன செயற்திட்டத்தினூடாக ஒட்டுமொத்த தேசமும் பாரிய அளவிலான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் உள்நாட்டு, வெளிநாட்டு அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

01

02

03

05

06

07

08

09

10

11

12

13

16

17

18

19

23

24

25

26

29

30

31

32

33

34

35

36

37

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்