1

வடமேல் மாகாணத்தில் தென்னங் காணிகளை துண்டாடுவதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்துமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

 

அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் பின்பற்றப்பட வேண்டிய உரிய முறைமைகளை தயாரிக்குமாறும் மாகாண சபை, பிரதேச சபை மற்றும் தெங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றிற்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

 

இன்று (07) முற்பகல் குருணாகல் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற குருணாகல் மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

 

வரையறையின்றி தென்னங்காணிகளை துண்டாடுவது தேங்காய் விலை அதிகரிப்பதற்கும் பல்வேறு சுற்றாடல் பிரச்சினைகளுக்கும் காரணமாகி உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இது தொடர்பாக அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

மாவட்டத்திலுள்ள 30 செயலாளர் பிரிவுகளில் 4432 கிராமங்களில் வாழும் 443,349 குடும்பங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 

கல்வி, சுகாதாரம், நெடுஞ்சாலைகள், விவசாயம், குடிநீர் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகளின் முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

 

குருணாகல் மாவட்டத்திலுள்ள 836 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை முறைமையில் சுமார் 660 கிலோமீட்டர் தற்போது காப்பட் இடப்பட்டிருப்பதுடன், மேலும் 176 கிலோமீட்டர் செப்பனிடப்பட வேண்டியுள்ளது. இந்தப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

 

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் இரண்டாவது பகுதியான மீரிகம முதல் குருணாகலை வரையிலான வீதியின் நிர்மாணப்பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

வடமேல் கால்வாய் திட்டம், காலநிலை தாக்கங்களை குறைப்பதற்கான திட்டம், தெதுறு ஓயா நீர்த்தேக்கத் திட்டம் ஆகிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

மேலும் குருணாகல் மாவட்டத்தின் சுமார் 1694000 பேருக்கான குடிநீர் தேவையை நிறைவேற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட “விசல் குருணாகலை“ நீர்வழங்கல் திட்டத்தின் பணிகள் தற்போது நிறைவடையும் கட்டத்தில் இருப்பதாகவும் மாவத்தகம, மல்லவபிட்டி பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி நடைமுறைப்படுத்தப்படும் கலகெதர – மாவத்தகம நீர்த்தேக்கத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது 65 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

பொல்கஹவெல, அலவ்வ, குருணாகலை, மல்லவபிட்டி, வீரம்புகெதர பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பொல்கஹவெல, பொத்துஹர, அலவ்வ இணைந்த நீர் வழங்கள் திட்டமும் மகவ மற்றும் பொல்பிட்டிகம பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய தெதுறு ஓயா நீர் வழங்கல் திட்டங்களுடன், கொடவெகர, கல்கம பிதேசங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படும் ஆணமடுவ இணைந்த நீர்வழங்கல் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான 100 மில்லியன் ரூபா நிதியை இரண்டு கட்டங்களின் கீழ் விடுவிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

 

இதனோடு இணைந்ததாக குளங்களை புனர்நிர்மாணம் செய்யும் நிகழ்ச்சித் திட்டமும் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், நாட்டில் 5 மாகாணங்களில் 2400 குளங்களை புனர்நிர்மாணம் செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குருணாகல் மாவட்டத்தில் 371 குளங்கள் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சி திட்டத்தையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

 

ஜனாதிபதி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சி திட்டம், போதை ஒழிப்பு தேசிய நிகழ்ச்சி திட்டம், சிறுநீரக நோய் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சி திட்டம், சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டம் உள்ளிட்ட தேசிய நிகழ்ச்சி திட்டங்கள் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விதம் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

 

மாவட்டத்திலுள்ள முக்கிய பிரச்சினைகளான வரட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் இடர் முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டங்கள், காட்டு யானைகள் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் போன்ற விடயங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

 

அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பி.நாவின்ன, காமினி ஜயவிக்கிரம பெரேரா, அகில விராஜ் காரியவசம், ரவூப் ஹக்கீம், துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, விஜித் விஜயமுனி சொய்சா, ரவீந்திர சமரவீர, இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர்களான இந்திக பண்டாரநாயக்க, அசோக அபேசிங்க, ஜே.சி.அலவத்துவல, தாராநாத் பஸ்நாயக்க, சாந்த பண்டார, முதலமைச்சர் தர்மசிறி தஸநாயக்க, மாகாண சபை உறுப்பினர்கள், குருணாகல் மாவட்ட செயலாளர் காமினி இலங்கரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2

3

4

5

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்