worldbank

வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களினால் இலங்கை கிராமிய மக்களிடையே வறுமை நிலை குறைவடைந்து வருவதாக உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கு பொறுப்பான உப தலைவர் கலாநிதி ஹார்ட்விங் ஸ்சபர் (Hartwig Schafer) தெரிவித்தார்.

 

இலங்கைக்கு வருகைதந்துள்ள உலக வங்கியின் உப தலைவர் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இலங்கை படிப்படியாக முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் நாடாக உலக வங்கி கண்டறிந்துள்ளது என்பதை தெரிவித்த உப தலைவர், தற்போது தனிநபரொருவரின் வருமானம் 4,000 டொலராக காணப்படுகின்றமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

 

கிராமிய ரீதியில் வறுமையை ஒழித்து அம்மக்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தியிருக்கும் விசேட வேலைத்திட்டங்கள் அவ்வாறான வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இதன்போது இலங்கையில் குளங்களை மறுசீரமைப்பதற்கும் பாரிய நீர்ப்பாசன வேலைத்திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி அவர்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு உபதலைவர் அவரது விருப்பத்தையும் தெரிவித்தார். 10,000 குளங்களை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தின் கீழ் 2,400 குளங்களை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வேலைத்திட்டங்களுக்கு உலக வங்கியால் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் ஒத்துழைப்பிற்கு ஜனாதிபதி அவர்கள் தனது நன்றியை தெரிவித்தார்.

 

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படும் பிரதேசங்களிலிருந்து விரயமாக கடலுக்கு செல்லும் நீரை குழாய் மூலமாக உலர் வலயங்களுக்கு கொண்டுசெல்லும் வேலைத்திட்டங்களுக்கான ஒத்துழைப்பை வழங்குமாறு ஜனாதிபதி அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாக தெரிவித்த உபதலைவர், அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான சாதக நிலைமைகள் தொடர்பில் துரிதமாக கண்டறியப்படும் என்றும் ஜனாதிபதி அவர்களுக்கு உறுதியளித்தார்.

 

இலங்கையில் பசுமை விவசாயம் மற்றும் சுற்றாடல் செயற்திட்டங்களுக்கு பெறக்கூடியதாகவுள்ள நிதி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், களனி கங்கையின் கரைகளை பலப்படுத்துவதனூடாக களனி கங்கை அண்மித்த பிரதேசங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்கு உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் விசேட செயற்திட்டமொன்றை தற்போது நடைமுறைப்படுத்தியிருப்பதுடன், அந்த வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் உப தலைவர் தெரிவித்தார்.

 

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் உலக வங்கியால் வழங்கப்படும் சகல நிதி ஏற்பாடுகளையும் முறைக்கேடுகளின்றி, முறையாக குறித்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான முதலீடு செய்யப்படும் என்று தான் உறுதியளிப்பதாக தெரிவித்தார்.

 

உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, ஜனாதிபதியின் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பிலான ஆலோசகர் கலாநிதி சரத் ராஜபதிரண, தேசிய பொருளாதார சபையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் லலித் சமரகோன் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்