01

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் இருந்துவரும் பிரச்சினைகளை தீர்த்து, அதனை மறுசீரமைப்பதற்கு தேவையான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற்று  பரிந்துரைகளை முன்வைப்பதற்கான குழுவொன்றை எதிர்வரும் திங்கட்கிழமை  நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

ஸ்ரீ லங்கன் விமான சேவையை முன்னேற்றுவதற்கான முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்களை குழுவுக்கு கையளிப்பதற்கு இதன்மூலம் அனைத்து தரப்பினர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

 

ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள், தீர்மானித்துள்ளதுடன், இரண்டுவார காலப்பகுதியில் இக்குழுவின் பரிந்துரைகள் ஜனாதிபதி அவர்களுக்கு முன்வைக்கப்படவுள்ளது. அப்பரிந்துரைகளை கவனத்திற்கொண்டு ஸ்ரீ லங்கன் விமான சேவை தொடர்பான அடுத்தகட்ட தீர்மானங்களுக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் தற்போதைய நிலைமை தொடர்பாக இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

ஸ்ரீ லங்கன் விமான சேவையை முறையான மறுசீரமைப்புக்கு உட்படுத்துவதற்கு தேவையான செயற்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

 

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் நட்டத்தை குறைத்து எதிர்காலத்தில் அதனை இலாபகரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்நிறுவனம் கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியாக நட்டமடைவதற்கு காரணமான விடயங்கள், தற்போது முகங்கொடுத்துள்ள சவால்கள் மற்றும் தற்போதைய அதன் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 

மேலும் ஸ்ரீ லங்கன் விமான சேவை ஏற்படுத்திக்கொண்டுள்ள சாதகமற்ற ஒப்பந்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு, ரூபா மற்றும் பிராந்திய பண மதிப்பிறக்கம், தொழிநுட்ப மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறைபாடு போன்றவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

 

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைகேடுகள் பற்றி கண்டறிவதற்காக ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

அமைச்சர்களான மங்கள சமரவீர, ஹர்ஷ த சில்வா, எரான் விக்கிரமரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, அரச வங்கிகளின் தலைவர்கள், ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனங்களின் தலைவர்கள், ஸ்ரீ லங்கன் விமான சேவையின் தலைமை நிறைவேற்று அதிகாரி விபுல குணதிலக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்