08

இந்திய அரசின் அன்பளிப்பாக 1200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பூரண உபகரண வசதிகளுடன் கூடிய ஹட்டன் டிக்கோயா ஆதார மருத்துவமனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் இன்று (12) நண்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

 

மூன்று மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் 150 கட்டில்களைக் கொண்ட வாட்டுத் தொகுதி, வைத்திய உபகரணப் பிரிவு, வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு, விசேட வைத்திய நிபுணர்களின் சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, உரிய உபகரணங்களுடன் கூடிய மகப்பேற்று அறை மற்றும் மகப்பேற்று பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, இரண்டு சத்திர சிகிச்சைக் கூடங்கள் என்பவற்றைக் கொண்டதாக அமைந்துள்ளது.

 

மேலும் இரத்த வங்கி, தீயணைப்பு உபகரணக் கட்டமைப்பு மற்றும் இரண்டு உத்தியோகபூர்வ விடுதிகள் என்பவற்றோடு ஆதார மருத்துவமனைக்குரிய அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

 

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அழைப்பில் இந்திய பிரதமரினால் புதிய கட்டிடத் தொகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

 

இதன் பின்னர் ஹட்டன், நோர்வூட் விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களினதும் பிரச்சினைகளும் சமூக சமத்துவத்துடன் தீர்க்கப்படல் வேண்டுமென தமது அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

 

தேசிய சமாதானத்தைக் கட்டியெழுப்பி நல்லிணக்கத்தை பலப்படுத்துதல் அரசின் முக்கிய பணியாகும் என்பதுடன், இதன் பொருட்டு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சகல இன மக்களுக்கும் சமூக சமத்துவத்தை வழங்கி தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி உலகில் சிறந்த நாடாக எமது தாய் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகும் என்றும் தெரிவித்தார்.

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இதன்போது உரையாற்றினார்.

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க, பீ.திகாம்பரம், மனோ கணேசன் ஆகியோரும், இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் உள்ளிட்ட மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

01 02 03 05 06 07 08 10 12 14 15 16 17 18 19 20 21

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்