1 (13)

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் மாதமொன்றுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள், சமூர்த்தி அலுவலர்களை உள்ளடக்கிய குழுவை அமைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பான விபரங்களைப் பெற்று, அதனடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து சிறுபோகம் ஆரம்பமாகும் வரை அக்கொடுப்பனவை வழங்குமாறும் ஜனாதிபதி அவர்கள் மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

வறட்சியால் விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக தொடர்புடையதுறை தலைவர்களுடன் நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே  ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

 

மண்போட்டு காணி நிரப்புதல் தொடர்பில் பெருமளவு முறைப்பாடுகள் மக்களிடமிருந்து கிடைத்து வருவதனால் உரிய அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தமது பொறுப்புக்களை உரியமுறையில் நிறைவேற்ற முடியாத அலுவலர்கள் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

 

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அரிசி வழங்கப்படவுள்ளது. அதற்கான புள்ளிவிபரங்கள் தொடர்பில் கவனஞ்செலுத்தி முறையாக பகிர்ந்தளிக்குமாறும் அலுவலர்களுக்கு தெரிவித்தார்.

 

அத்துடன் நீர்த்தட்டுப்பாடுள்ள பிரதேச மக்களுக்கு குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளுக்காக வழங்கப்படும் நீர் பயன்படுத்த உகந்ததாக இருக்க வேண்டியது கட்டாயமானதெனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், மக்கள் குளிப்பதற்காக தூரத்திலிருக்கும் பொது கிணறுகளுக்கு மக்களை கொண்டுசெல்ல வேண்டுமாயின், பஸ்களை பயன்படுத்துவது தொடர்பில் கவனமெடுக்குமாறும் குறிப்பிட்டார்.

 

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடிக்கு தீர்வாக பல்லேகல, ஹம்பாந்தோட்டை, குருணாகல், காலி போன்ற பிரதேசங்களில் அவசர மின்பிறப்பாக்கிகளை நிறுவுவதற்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் ஊடகங்கள் மூலம் மக்களை தெளிவுபடுத்துமாறும் தெரிவித்தார். அத்துடன் தொடர்ச்சியான மின் வழங்கலுக்காக செலவாகும் நிதியை திறைசேரியிலிருந்து வழங்குவதாகவும் தெரிவித்தார்.

 

உள்ளுராட்சி நிறுவனங்களை இணைத்து கிராமப்புறங்களிலிலுள்ள குளாய் கிணறுகளை திருத்துதல், தோட்ட கிணறுகளை அமைத்தல், விதைநெல் உற்பத்தி, ஈரவலயத்திலுள்ள கைவிடப்பட்ட நெல் வயல்களில் பயிர்செய்தல் போன்ற விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

 

அமைச்சர்களான அனுரபிரியதர்ஷன யாப்பா, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்கா, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, துமிந்த திஸாநாயக்க, பைசர் முஸதபா, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் உள்ளிட்ட அமைச்சு செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள்.

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்