Tamil-1140x499

கௌரவ சபாநாயகர் அவர்களே! கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே! எமது நாட்டின் வரலாற்றில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் மிகவும் அமைதியாக நடைபெற்ற பொதுத் தேர்தல்மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள இந்நாட்டின் பிரதிநிதித்துவ சனநாயகத்தின் முன்னோடிகளான உங்களுக்கு இலங்கை மக்களின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு புதிய பாராளுமன்றத்துக்கு வரவேற்கக் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
ஐந்து தசாப்தங்களுக்கு கிட்டிய அரசியல் அனுபவமும், அதில் 26 வருடங்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம்செய்து பெற்ற பக்குவத்துடனும் கூடியதாக, நான் 2015 சனவரி 08ஆந் திகதி நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொதுவேட்பாளராக முன்வந்து வெற்றிபெற்ற வேளையில் எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத சகோதர நாட்டுமக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்ளுகின்றேன்.
கௌரவ உறுப்பினர்களே! இவ்விதமாக உங்கள் மத்தியில் முன்வைக்கப்படுகின்ற இப்பிரகடனத்தின்மூலம் பாராளுமன்ற சனநாயகத்தின் மற்றுமொரு மரபு மீண்டும் உறுதிப்படுத்தப்படுகின்றது. பிரித்தானிய மரபுக்கிணங்க சிம்மாசன உரை எனவும் அமெரிக்க சனநாயகத்திற்கிணங்க ஆரம்ப உரை எனவும் அழைக்கப்படுகின்ற இந்த அக்கிராசன உரையின் நோக்கம், புதிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கொள்கைப் பிரகடனத்தைச் சுருக்கமாகப் பாராளுமன்றத்தில் முன்வைப்பதாகும்.
நான் அறிந்தவரையில், மக்களுக்காகச் சட்டங்களை ஆக்குகின்ற மக்கள் பிரதிநிதிகளான உங்கள் முன்னிலையில் இதற்கு முன்னர் நிலவிய எந்தவொரு பாராளுமன்றமோ அல்லது அதன் பிரதிநிதிகளோ எதிர்நோக்கியிராத வகையிலான பல்வேறு சவால்கள் உருவாகிவருவதை நீங்கள் அறிவீர்கள். ஏற்கெனவே பல மில்லியன்களான இலங்கை மக்கள் தமது உள்ளங்கைமீது முழு உலகத்தையும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய நவீன தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். நாங்கள் கற்பலகைகளை ஏந்திக்கொண்டு முன்பள்ளி சென்றதைப்போல் எமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் மடிக்கணினிக்கு அப்பால்சென்று ‘ஐபேட்’ ஒன்றை எடுத்துக்கொண்டு முன்பள்ளி செல்லும் நாள் இந்தப் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு முன்னர் உருவாகக்கூடியதாக உள்ளது. இந்நாட்டின் சட்டங்களை வகுப்போராக உங்கள் அனைவரையும் மக்கள் தெரிவுசெய்திருப்பது இத்தகைய மாற்றமேற்படுகின்ற ஒரு காலகட்டத்தில்தான் என்பதை உங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதற்கிணங்க, இலங்கைத் தேசத்தவர் என்ற வகையில் எம்மை ஒன்றாகப் பிணைக்கின்ற எமது கலாசார விழுமியங்களை அவ்விதமே பாதுகாத்துக்கொண்டு மலரப்போகின்ற அந்தப் புதிய யுகத்திற்காகவும் அந்தப் புதிய தலைமுறையினரின் அபிலாஷைகளுக்காகவும் எதிர்காலத்தை நோக்கிய சிந்தனையுடன் இந்த நாட்டினைக் கட்டியெழுப்புகின்ற சவால் எம்மனைவர் எதிரிலும் இருக்கின்றது.
எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக நான் முதற்கண் ஒரு விடயத்தை வலியுறுத்த வேண்டும். இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் முப்படையின் சேனாதிபதி என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் நான் இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு சம்பந்தமாக பூரணமான பொறுப்பினை வகிக்கிறேன். அந்தப் பொறுப்பினை நான் முற்றுமுழுதாக ஈடேற்றுவேன் என்பதையும் அப்பணியின்போது உங்களின் பூரண ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும், வேறு எவ்விடயத்தின் முன்னேயும் இரண்டாம்பட்சமாகக் கருதாமல் எனக்கு வழங்கும்படியும் விநயமாகக் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றிலிருந்து ஆரம்பிக்கும் பாராளுமன்றம், இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியமானதொரு திருப்புமுனையைப் பதிவுசெய்கின்றதென்பது எனது கருத்தாகும். சுதந்திரத்தின் பின் இன்றுவரை, ஒரு பிரதான கட்சியைச் சுற்றி ஏனைய சிறு கட்சிகள் ஒன்றிணைந்து கட்டியெழுப்பப்பட்ட கூட்டரசாங்கம் தொடர்பான அனுபவம் மாத்திரமே எம்மிடம் காணப்பட்டது. எனினும், தேசிய சர்ச்சைகளின் முன்னே நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் தனது அரசியல் முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு இணக்கப்பாட்டு கூட்டணி அரசாங்கங்களை அமைத்தல் தொடர்பான முன்மாதிரிகள், உலகில் பல நாடுகளில் காணப்படுகின்றன. நிறபேதவாதத்தை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவந்தவுடன் தென்னாபிரிக்காவின் பிரதான அரசியல் கட்சிகள் இனப் பிரிவினைகளை அடியோடு களைந்துவிடுவதையும் நாட்டைத் துரித அபிவிருத்தியை நோக்கி நகர்த்துவதையும் நோக்கமாகக் கொண்ட இணக்கப்பாட்டுக் கூட்டணி அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்பின. இலங்கையின் முன்னே காணப்படும் தேசிய மற்றும் சர்வதேச சவால்களுக்குக் கூட்டாக முகங்கொடுப்பதற்கு இதே முறையிலான இணக்கப்பாட்டு கூட்டணி அரசாங்கமொன்றை எமது நாட்டில் கட்டியெழுப்ப வேண்டியிருந்த பொன்னான வாய்ப்பு யாதெனில், இலங்கை யுத்தத்துக்குப் பின்னரான காலகட்டத்தை நோக்கி நகர்ந்த முதல் சந்தர்ப்பமாகும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

எனினும், மூன்று தசாப்தங்களாக தொடர்ச்சியாக நிலவிய யுத்த சூழ்நிலையில், நாட்டை அரசாட்சி செய்த எமது நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளுக்கும் ஆயுதமோதல்களற்ற சமாதானமான இலங்கையை முழு சனநாயக வரம்புக்குள் நிருவகிப்பது எவ்வாறு என்பது தொடர்பாகக் காணப்பட்ட குறைந்த அனுபவத்தின் காரணத்தினால், முரண்பாட்டு அரசியலுக்குப் பதிலாக இணக்கப்பாட்டு அரசியலை நாட்டில் தாபிப்பதற்கான ஆற்றலைக் கொண்டுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் சேர்ந்து கட்டியெழுப்பும் இணக்கப்பாட்டுக் கூட்டணி அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வதற்கு நாம் தவறிவிட்டோம்.

தேசிய அரசாங்கக் கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டு நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளின் கூட்டு முயற்சியினால் கட்டியெழுப்பப்படும் இணக்கப்பாட்டுக் கூட்டணியின் பிரதான பணி யாதெனில், அனைத்து இனங்களுக்குமிடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதையும் சமூக – பொருளாதார அபிவிருத்தியையும் ஒருங்கே நிறைவேற்றிக்கொண்டு, 2020ஆம் ஆண்டில் உதயமாகும் புது உலகுக்கும் அதற்கப்பாலுள்ள தேசிய மற்றும் சர்வதேச சவால்களுக்கும் ஒரேவிதமாக வெற்றிகரமாக முகங்கொடுக்கக்கூடிய உயரிய மனித அபிவிருத்தியை நோக்கி இந்நாட்டை இட்டுச் செல்வதாகும்.

குறிப்பாக, எமது நாடு மூன்று தசாப்தங்களாக யுத்தத்தில் சிக்கியிருந்தபோது, ஆசியாவில் எம்மைப் போன்ற வரலாற்றைக் கொண்டிருந்த நாடுகளைப் போன்றே எம்மைவிட, பலவீனமான சமூக – பொருளாதார நிலையிலிருந்த ஒரு சில நாடுகள் இக்காலகட்டத்தில் துரித அபிவிருத்தியைக் கண்டுள்ளன. எனவே, அந்நாடுகளுக்கும் எமது நாட்டுக்குமிடையில் பாரிய அபிவிருத்தி இடைவெளியொன்று உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த அபிவிருத்தி இடைவெளியைக் குறைத்துக்கொள்ளும் சவாலை வெற்றிகொள்ளும் பூர்வாங்க மூலோபாயமாக, தாமதமாகியேனும் இரண்டு பிரதான கட்சிகளினதும் சேர்க்கையினால் இணக்கப்பாட்டுக் கூட்டணி அரசாங்கமொன்றைத் தாபிப்பதன் தேவைப்பாட்டை நான் கண்டேன். நான் 2015 சனாதிபதித் தேர்தலுக்காக முன்வைத்த “மைத்ரீ ஆட்சி” எனும் கொள்கை விஞ்ஞாபனத்தில் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளவாறு தேசிய இணக்கப்பாட்டுக் கூட்டணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு நான் முன்னின்று நடவடிக்கை மேற்கொண்டது இத்தேவைப்பாட்டைத் தாமதமின்றி நிறைவேற்றும் நோக்கத்திலாகும். இப்பாராளுமன்றம் இரண்டு வருடங்களுக்கான இணக்கப்பாட்டுக் கூட்டணி அரசாங்கமொன்றை நிறுவுவது அந்தத் தேசியத் தேவைப்பாட்டை நிறைவு செய்வதற்காகும். இது இந்நாட்டில் புதிய முன்னேற்றகரமான அரசியல் கலாசாரமொன்றின் ஆரம்பமாகுமென நான் நம்புகின்றேன்.

அவ்வாறே, இப்பாராளுமன்றத்தினூடாக உருவாகும் இணக்கப்பாட்டுக் கூட்டணி அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலைத் தயார் செய்கையில், கடந்த சனாதிபதித் தேர்தலுக்கு என்னால் முன்வைக்கப்பட்ட, இந்நாட்டின் பெரும்பாலான மக்களால் அங்கீகரிக்கப்பட்ட “மைத்ரீ ஆட்சி – நிலையானதொரு நாடு” எனும் கொள்கைப் பிரகடனம் பூர்வாங்க அடிப்படையாக இருக்கின்றது. அதேபோன்று, கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதியன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான அரசியல் கட்சிகளான, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி முன்வைத்த “ஐவகைச் செயற்பாடுகள்” கொள்கைப் பிரகடனமும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்வைத்த “எதிர்காலத்திற்கான உத்தரவாதம்” கொள்கைப் பிரகடனமும், மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த “மனச்சாட்சியின் இணக்கப்பாடு” மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும், எனது “மைத்திரி ஆட்சி – நிலையான நாடு” கொள்கைப் பிரகடனத்தில் முன்வைத்துள்ள நல்லாட்சிக் கோட்பாடுகளை முதன்மையாகக் கொண்டுள்ள கொள்கை வரைச்சட்டகத்துடன் ஏற்கெனவே ஒப்பீட்டு ரீதியில் ஆராயப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், எனது “மைத்ரீ ஆட்சி – நிலையான நாடு” கொள்கைப் பிரகடனத்தின்மூலம் இனங்காணப்பட்டுள்ள எதிர்காலத்திற்கான நோக்குக்கு சமாந்தரமானதும் அதற்கு இயைபானதுமான கொள்கை முன்மொழிவுகளைச் சாராம்சப்படுத்தி புதிய இணக்கப்பாட்டு கூட்டமைப்பு அரசாங்கத்தின் கொள்கை ஆக்கத்தினை அதனைத் தழுவியதாக மேற்கொள்வதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே, ஒரு நாடு அல்லது தேசம் அதன் தனித்துவத்தின் அடிப்படையாக அந்நாட்டின் அரசியலமைப்பையே கருதுகின்றது. ஆகையால், அரசியலமைப்பை தேசத்தின் உன்னதமான ஆவணமாகவே கருதுகின்றோம். சுதந்திரம் அடைந்தது முதல் கடந்து சென்ற 60 வருட காலத்தினுள் மூன்று அரசியலமைப்புகளை நாம் அமுல்படுத்தியுள்ளோம். எனினும் இன்றுவரை எமக்கு இலங்கைத் தேசத்தின் அடிப்படையாக, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு இயலாமற்போனமை பெரும் துர்ப்பாக்கியமாகும். குறிப்பாக, இன்று எமது நாட்டில் அமுலிலுள்ள 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட திகதி முதல் அதன் அடிப்படையாயுள்ள நிறைவேற்று அதிகாரம்கொண்ட சனாதிபதிப் பதவி மற்றும் தேர்தல் முறை தொடர்பில் பல தரப்புகளிலிருந்தும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் விடுக்கப்பட்டு வருகின்றது. “மைத்ரீ ஆட்சி – நிலையான நாடு” கொள்கைப் பிரகடனத்தினுள் இது தொடர்பாக நான் எனது விசேட கவனத்தைச் செலுத்தியுள்ளேன். 1978 அரசியலமைப்புடன் சேர்க்கப்பட்ட 19வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டமை எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ளதொரு வாக்குறுதி நிறைவேற்றப்படுதலாகும். நிறைவேற்று அதிகாரம்கொண்ட சனாதிபதி முறை தொடர்ந்தும் இருக்க வேண்டுமா? ஆமெனில், அதன் இயல்பு எவ்வாறானதாகக் காணப்படுதல் வேண்டும்? என்பதைப் பற்றிய இறுதி முடிவெடுத்தல் தாங்கள் அமர்ந்திருக்கும் இப்பாராளுமன்றத்தின் கடமையாகும். எனது மேலுமொரு பிரதான தேர்தல் வாக்குறுதி யாதெனில், சுமார் மூன்று தசாப்தங்களாக மக்களுடைய அதிருப்திக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியுள்ள விகிதாசாரத் தேர்தல் முறையில் உள்ளடங்கியுள்ள பாதகமான மற்றும் பொருத்தமற்ற பண்புகளையும் அதனோடு இணைக்கப்பட்டுள்ள விருப்புவாக்கு முறையையும் மாற்றியமைத்தலாகும். கடந்த பாராளுமன்றப் பதவிக் காலத்தின் இறுதிக் காலத்தில் நான் முன்வைத்த 20வது அரசியலமைப்புத் திருத்தப் பிரேரணையின்மூலம் அதற்குத் தேவையான அடிப்படை ஏற்கெனவே இடப்பட்டுள்ளதென்பதை நீங்கள் அறிவீர்கள். அதன் பிரகாரம், அனைத்து அரசியல் கட்சிகளாலும் அதேபோன்று சிவில் சமூகத்தினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, மிகப் பொருத்தமான தேர்தல் முறையொன்றை வகுத்து நிறைவேற்றுகின்ற வரலாற்று ரீதியான கடமைப்பொறுப்பும் நீங்கள் அமர்ந்திருக்கும் இப்பாராளுமன்றத்திற்கு ஒப்படைக்கப்படுகின்றது.
யுத்தத்திற்குப் பிந்திய இலங்கையில் நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் அபிவிருத்தியை நோக்கமாகக்கொண்ட பெருமைமிக்க இலங்கையர்களாக எழுந்திருப்பதற்கெனில், நாம் கட்டாயமாக எடுக்கவேண்டியிருந்த, எனினும் இற்றைவரை எம்மால் எடுக்க முடியாமற்போன அரசியல் தீர்வுகளை, முடிவுகளை மற்றும் மறுசீரமைப்புகளை மேற்கொள்கின்ற கடமைப் பொறுப்பும் மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள் அமர்ந்திருக்கும் இப்பாராளுமன்றத்திற்கே ஒப்படைக்கப்படுகின்றது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர், மலாயர் மற்றும் பூர்வீகக்குடிகள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரிவுகளின் நல்லிணக்கமும் பௌத்தம், இந்து, இஸ்லாம், மற்றும் கிரிஸ்தவ சமயக் குழுக்களின் சகவாழ்வும் பொதிந்த புதியதொரு இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியின் பங்குதாரர்களாக இன்று நீங்கள் மாறியிருக்கின்றீர்கள். இப்பணியின்போது சனாதிபதி என்ற வகையில் என்னால் வழங்கப்பட வேண்டிய தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் ஒத்துழைப்பினையும் எவ்விதத் தாமதமுமின்றி வழங்குவதற்கு நான் என்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளேன். இந்த அரசியல் பயணத்தில் ஈடு இணையற்ற, உயரிய சனநாயக தேசமாக இலங்கையைக் கட்டியெழுப்பும் பணி இப்பாராளுமன்றத்திற்குரியதொரு கடப்பாடாகுமென்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது நாட்டிற்கு சொந்தமான வளங்களில் மனித வளம் மிகப் பெறுமதிவாய்ந்த வளமாகும். ஆகவே, மனித வளத்தை ஈடிணையற்ற விதத்தில் விருத்தி செய்வதே எமது நாட்டின் அபிவிருத்தி முயற்சிக்கு அடிப்படையாக அமையுமென நான் நம்புகின்றேன். நவீன உலகம் பாரியளவில் தொழில்நுட்ப வெற்றிகளை ஈட்டிக்கொண்டுள்ளதொரு சூழமைவில் ஒரு நாடு நடுத்தர வருமான மட்டத்தைத் தாண்டிச் செல்ல இயலுமாயிருப்பது தனது நாட்டின் பயிற்றப்பட்ட ஊழியத்தைத் தாராளமாகக் கிடைக்கச்செய்வதன்மூலம் மட்டுமேயாகும். ஆகவே, உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழிற் சந்தையின் எந்தவொரு தேவைப்பாட்டிற்கும் பொருந்தக்கூடிய வகையில், இலங்கையின் தொழிற்படையை வலுவூட்டல் எனப்படும் திறன் அபிவிருத்தியை எனது அரசாங்கத்தின் முன்னுரிமையளிக்கப்பட்டதொரு கடமையெனக் கருதுகிறேன்.
21வது நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாகும் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட வேண்டும். உலக பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக ஆசியா எழுச்சிபெற்று வருகின்ற சூழமைவினுள் தோற்றம் பெறும் பொருளாதார வாய்ப்புகளிலிருந்து உச்சமட்ட நன்மைகளை ஈட்டிக்கொள்ளக்கூடிய வகையில் புவி-அரசியல் அமைவிடத்தை எமது நாடு இயற்கையிலேயே பெற்றுள்ளமை ஓர் அதிருஷ்டமாகும் என்பதைக் குறிப்பிட வேண்டும். இவ்வாறு, இயற்கை எமக்களித்துள்ள பெரும் வாய்ப்புகளிலிருந்து உச்சமட்ட அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எமது எதிர்கால பொருளாதாரக் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் உத்திகளை வகுத்துக்கொள்ளுதல் எமது அடிப்படைப் பொறுப்பாக அமைகின்றது.
எமது பொருளாதாரத் திட்டங்களை வகுத்துக்கொள்ளும் செயன்முறையின்போது, நீண்டகாலமாக கவனத்திற்கொள்ளப்படாமல் இருந்த பல முக்கியமான துறைகளும் அதைச் சார்ந்த பல சிக்கல்களும் உள்ளன. சுயதொழில் மற்றும் சிறு தொழில்முயற்சிகளை அடிப்படையாகக்கொண்ட முறைசாரா பொருளாதாரம் அதில் முக்கிய இடம் வகிக்கின்றது. எமது நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு முறைசாரா பொருளாதாரத் துறைகளிலிருந்து கிடைக்கின்ற பங்களிப்பினைக் கருத்திற்கொள்ளும்போது, அத்துறைகள் சார்பாக இதனைவிட அதிகளவு கரிசனையும் சாதகமான ஒத்துழைப்பும் அரசிடமிருந்து கிடைக்கவேண்டியது அவசியமாகும்.
நிரந்தர வருமானத்தை ஈட்டிக்கொள்ளாத சிறு தொழில்முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நுண் கடன்கள் மற்றும் நிதி முகாமைத்துவம் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதன்மூலம் கிராமியப் பொருளாதாரத்திற்கு கைகொடுத்துதவுவதற்கு எனது அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
நல்லாட்சிக் கோட்பாடுகளை முதன்மையாகக்கொண்ட “மைத்திரி ஆட்சி” கொள்கைப் பிரகடனத்தை அங்கீகரித்த பெரும்பாலான மக்கள் எனக்கு வழங்கிய ஆணையின் ஓர் அடிப்படை நோக்கம், ஊழலை ஒழித்து அரச சொத்துக்களைப் பாதுகாப்பதாகும். ஆகவே, ஊழல், மோசடி, விரயம் ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவதற்கான அர்ப்பணிப்பு எனது அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாக அமைகின்றது. ஊழலை ஒழித்துக்கட்டுவதற்காக தற்போதுள்ள நிறுவனக் கட்டமைப்பை மேலும் வலுவூட்டுவதற்கும் அரச சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்களென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களின் அந்தஸ்து எதுவாக இருப்பினும் அவர்களை, எவ்வித பக்கச்சார்புத்தன்மையும் காட்டாமல் நீதிமன்றத்திற்கு முன்னால் ஆஜர் செய்வதற்கு நான் ஒருபோதும் தயங்கமாட்டேன்.
இன்று எமது நாடு நடுத்தர வருமானம் பெறும் ஒரு நாடு என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தப் பாராளுமன்றக் காலத்தினுள் அந்த வருமானத்தை கணிசமான அளவிற்கு உயர்த்துவதற்கேதுவான அடிப்படைப் பொருளாதார உத்திகளைத் துரிதமாகவும் வெற்றிகரமாகவும் நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கமாக அமைதல் வேண்டும்.
இருப்பினும், அபிவிருத்தியின் அனுகூலங்களை நாட்டிலுள்ள அதிக செல்வம் படைத்த ஒருசிலர் மட்டுமே அனுபவிக்கின்றபோது, பெரும்பாலான மக்கள் வறுமையின் படுபாதாளத்திற்குத் தள்ளப்படுவார்களாயின், இலங்கையைப் பொருளாதார ரீதியில் வெற்றிபெற்றுள்ள ஒரு நாடாக எம்மால் கருத முடியாது. எனவே, தலா வருமானத்தை அதிகரிக்கச் செய்கின்ற அதேவேளை, வருமானம் பகிர்ந்தளிக்கப்படும் முரண்பாட்டினைக் குறைப்பதனூடாக நாட்டின் நடுத்தர வகுப்பினரை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது.
அதேவேளை, நமது நாட்டின் சகல பகுதிகளிலும் அபிவிருத்தியை இடம்பெறச் செய்வது எனது அரசாங்கத்தின் பொறுப்பாக அமைகின்றது. குறிப்பாக, யுத்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பிரதேசங்களுக்கும் எல்லைக் கிராமங்களாக அழைக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அமைந்துள்ள பின்தங்கிய கிராமங்களுக்கும் அபிவிருத்தியின் ஔிக்கீற்றுக்களைக் கிடைக்கச்செய்து, நாடு பூராவும் ஒரு சமமான அபிவிருத்தியை மேற்கொள்ளும் பொறுப்பினை எனது அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
உலகின் பெரும்பாலான கைத்தொழில் நாடுகள் ஒட்டுமொத்த மனித குலத்திற்கே பாதகமாக அமையக்கூடிய வகையிலான பாரிய சுற்றாடல் சேதத்தினை ஏற்படுத்தியே துரிதமான பொருளாதார வளர்ச்சியை அடையப்பெற்றுள்ளன. ஆயினும், தற்போது தாம் சென்ற பாதையின் பாதகமான பெறுபேறுகளை இனங்கண்டுள்ள அந்நாடுகள் கைத்தொழில் பொருளாதாரத்திலிருந்து அறிவினை அடிப்படையாகக்கொண்ட பொருளாதாரம், புத்தாக்கப் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் மற்றும் நிலைபேறான பொருளாதாரம் என்ற எண்ணக்கருக்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. இலங்கையானது மானுட அபிவிருத்தியின் இலக்குகளையும் சமூக – பொருளாதார முன்னேற்றத்தையும் நோக்கி மேற்கொள்ளும் பயணத்தின்போது எமது நாட்டை உலகிலேயே மிகவும் வணப்புமிகு நாடாக மாற்றியமைக்கின்றதான பசுமைமிகு சுற்றாடலுக்கும் பசுமையான வனத்திற்கும் அல்லது வனசீவராசிகள் குலத்திற்கும் எதுவித சேதமும் ஏற்படலாகாதென்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன். அப்பயணத்தை மேற்கொள்வதற்காக புத்த பெருமானால் சுருக்கமாகப் போதித்தருளிய “சந்துஷ்டி பரமங் தனங்” எனும் பௌத்த பொருளாதார கோட்பாட்டினை நாம் பின்பற்ற வேண்டுமென்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
இயற்கைக்கு எதிராகச் சென்று நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்திக்கொள்ள முடியாதென்பதனை உலகம் தற்போது புரிந்துகொண்டு வருகின்றது. 2500 வருடங்களாக எமது நாட்டினைப் போஷித்து வருகின்ற பௌத்த தத்துவமானது இயற்கையுடன் இசைவாக்கமடைந்து நடுநிலைக் கோட்பாட்டினைப் பின்பற்றி மகிழ்ச்சியினையும் செழுமையையும் அடைந்துகொள்ளக்கூடிய விதத்தினை எமக்குச் சுட்டிக்காட்டுகின்றது. நவீன யுகத்தில் பிரவேசிக்கும்போது எமது நாடு கொண்டுள்ள பௌத்த பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பாரியதொரு வளமாகவும் பாக்கியமாகவும் நான் கருதுகின்றேன். நாம் நமது நாட்டின் பிள்ளைகளுக்கு உலகிலேயே ஆகக்கூடிய பொருட்களையும் சேவைகளையும் நுகர்வு செய்கின்ற ஒரு நாடாகவன்றி, குறைந்த நுகர்வின்மூலம் ஆகக்கூடிய திருப்தியைப் பெறக்கூடிய, செழுமை மற்றும் அமைதியான மக்களைக் கொண்டுள்ள ஒரு நாடாகக் கையளிக்க வேண்டுமல்லவா!
கௌரவ சபாநாயகர் அவர்களே, உலகமயமாக்கத்திற்கு உள்ளான ஒரு புதிய உலக முறையினுள்ளேயே நாம் வாழ்ந்து வருகின்றோம். இதில் உலகிலுள்ள சகல நாடுகளும் எமக்கு முக்கியமானவையே. அவர்களிமிருந்து நாமும் எம்மிடமிருந்து அவர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. எனவே, வெளிப்படைத்தன்மையும் நட்புறவும் எமது வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையாக அமையும். ஆசியாவின் நூற்றாண்டினை நாம் எட்டியுள்ளோம் என்பதை நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். அதன்படி இன்று தொடக்கம் எனது அரசாங்கமானது ஆசியாவை மையமாகக்கொண்ட நடுநிலைப் பாதையிலான வெளிநாட்டுக் கொள்கையின்பால் அதிக கவனம் செலுத்தும் என்பதனைத் தெரிவிக்கின்றேன்.
கடந்த சில வருடங்கள் பூராவும் எமது நாட்டுக்கான வெளிநாட்டுக்கொள்கையில் அதிகூடிய இடம் ஜெனீவா எனும் சொற்பதத்திற்கே ஒதுக்கப்பட்டிருந்தது என நான் நம்புகின்றேன். கடந்த சனவரி 08ஆம் திகதி நான் சனதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டவேளை தொடக்கம் எம்மைப் பற்றிய சர்வதேசத்தின் மனப்பாங்கானது மிகவும் சாதகமான முறையில் மாறிவருகின்றது. இத்தகைய சிக்கலான நிலைமைகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கும்போது சர்வதேச சமுதாயத்தின் நம்பிக்கை, இணக்கப்பாடு மற்றும் ஒத்துழைப்பு என்பன மிக முக்கியமானவைகளாக அமைகின்றன. கடந்த ஏழு மாத காலத்துக்குள் இதுவரை காணப்பட்ட நிலைமையை நாட்டுக்குச் சாதகமாகவும் நாட்டின் பெருமை, நன்மதிப்பு என்பவற்றை மேம்படுத்திக்கொள்ளும் வகையிலும் மாற்றியமைத்துக்கொள்ள எனது அரசினால் முடியுமாயிருந்தது என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
முற்காலத்தில் கீழைத்தேய தானியக் களஞ்சியமாக வர்ணிக்கப்பட்ட எமது நாடு, இன்று எமது நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய உணவு வகைகளைக் கூட இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும். வீட்டுத் தோட்டத்தில் பெற்றுக்கொள்ளக் கூடியவைக்காகச் சந்தைக்குச் செல்வதும் பிரதேசத்தில் வளர்கின்றவற்றுக்காகத் தூர இடங்களுக்குச் செல்வதும் எமது நாட்டில் வளர்கின்றவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வதும் எமது அரசாங்கத்தின் கமத்தொழில் கொள்கையல்ல. அதற்குப் பதிலாக வீட்டுத் தோட்டம், கிராமம் மற்றும் நாட்டைக் கேந்திரமாகக்கொண்ட தேசிய உணவுக் கொள்கையொன்றைத் தயாரித்தல் ஏற்கெனவே என்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உண்மையாகவே, நான் கமத்தொழில் அமைச்சராக இருந்தபோது நடைமுறைப்படுத்திய “பயிரிடுவோம்! நாட்டைக் கட்டியெழுப்புவோம்!” வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கம், இவ்வாறு உள்நாட்டு உணவு உற்பத்தியை மேம்படுத்துவதாகும்.

நாட்டின் எதிர்காலத்துக்கு நிலையான அடிப்படையொன்றை வழங்க வேண்டுமெனின், கமத்தொழில் அபிவிருத்தி மிகவும் இன்றியமையாத காரணியாகும் என்பதை இற்றைக்கு ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் அறிந்து, பாரியளவிலான விவசாயக் குடியேற்றத் திட்டங்களை நிறுவ நடவடிக்கை எடுத்த அமரர் டி.எஸ். சேனாநாயக்கவின் கமத்தொழில் சிந்தனைக் கோட்பாட்டை நான் இச்சந்தர்ப்பத்தில் கெளரவத்துடன் நினைவுகூர்கின்றேன்.

நெற்செய்கையை முன்னிலைப்படுத்தி, விவசாய உற்பத்திகளை மேம்படுத்துவதன்மூலம், ஆரோக்கியமான உணவினை உள்நாட்டில் உற்பத்தி செய்து மக்களின் போசாக்குத் தேவையைப் பூர்த்தி செய்தல் எமது அரசின் அடிப்படை இலக்காகும். அதன்படி, மொரகஹகந்த, களுகங்கை போன்ற நீர்த்தேக்கங்களை நிர்மாணித்து, குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான நீர்ப்பாசன வசதிகளைப் பூர்த்தி செய்வதற்கும் கமத்தொழில் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொடர்பான உற்பத்தித் துறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கும் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அதேபோன்று நாட்டின் உயிர்நாடியான விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள சிறுநீரக நோய் ஆபத்தினை இல்லாதொழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

நன்னீர் மற்றும் உவர்நீர் மீன்பிடித் துறையை மேலும் மேம்படுத்துவதன்மூலம் நாட்டில் தற்போது நிலவும் புரதச்சத்துக்கான போசாக்குக் குறைவினை இல்லாமல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, தீவக தேசமொன்றில் வாழும் நாம் கடல்வளத்திலிருந்து உச்ச பயனைப் பெற்றுக்கொள்ளத் தாமதமின்றிச் செயற்பட வேண்டும். இலங்கையின் நிலப்பரப்பினைப் போன்று எட்டுமடங்கு விசாலமான எமது சமுத்திரப் பிரதேசத்தைக் கடற்றொழிலுடன் மாத்திரம் வரையறுத்துக்கொள்ளக்கூடாது. அதன்படி, சமுத்திரவியலைத் தற்போதுள்ளதைவிட நடைமுறை ரீதியாகவும் விரிவான முறையிலும் எமது நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்திக்கொள்ள எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

தற்போதைய உலக நடப்புக்கமைய ஓர் அரசாங்கத்தினால் நாட்டு மக்களின் சகல தேவைகளையும் நிறைவேற்ற முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அரச துறையும் தனியார் துறையும் சிவில் துறையும் ஒரே விதத்தில் பலப்படுத்தப்படல் வேண்டும். தனியார் துறையைக் கட்டியெழுப்பும்போது உள்நாட்டுக் கைத்தொழில்களுக்குக் கூடிய சலுகைகளை வழங்குதல் வேண்டும். அதேபோன்று தனியார் துறையில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளைக் கவரும் வகையில் அதற்கான ஊக்குவிப்புக்களையும் சலுகைகளையும் வழங்க எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இதைத் தவிர, தனியார் துறை ஊழியர்களுக்குச் சலுகைகள் மற்றும் நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் எமது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக, அரச துறையின் அதிக பங்களிப்புடன் கூடியதாக இலவச சுகாதார சேவை, இலவசக் கல்வி, பொதுப் போக்குவரத்து போன்ற அனைத்து மக்களுக்கும் பயன்களை வழங்கும் துறைகளைத் தற்போதுள்ளதைவிட மிகவும் சிறப்பான தரமுள்ளதாக உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்போது, அரச சேவையின் தரத்தையும் அதன் திறனையும் மேம்படுத்திக்கொள்ளத் தேவைப்படும் சீர்திருத்தங்களைத் தாமதமின்றி அறிமுகப்படுத்துவதற்கும் எனது அரசாங்கம் அதிக கவனத்தைச் செலுத்தும். இதற்கமைய, அரச நிறுவனங்களில் ஆலோசனைக் குழுக்களை நிறுவி,அவற்றை முறையாக இயங்கச் செய்வதற்கும் அரச சேவையின் சம்பள முரண்பாடுகளை மேலும் தணிப்பதற்கும் திறமை அடிப்படையிலான ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு முறைமைகளை அறிமுகப்படுத்துவதற்கும் ஒட்டுமொத்த அரச சேவை பற்றி அரச ஊழியர்களைப் போன்றே பொது மக்களிடமும் கண்ணோட்ட ரீதியான மற்றும் மனப்பாங்கு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் எனது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். நான் மேலே கூறிய அனைத்தையும் யதார்த்தமானதாக ஆக்குவதற்கெனில், அமைச்சர்கள், அரசாங்கங்கள் அல்லது சனாதிபதிகளுக்கு ஏற்ப மாற்றமடையாத தேசிய கொள்கைகளைத் தாபிப்பதற்கு எனது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

மேலும், குறிப்பாக, ஈழவாத பயங்கரவாதம் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சியின் முன்னே, தமது உயிரைத் தியாகம் செய்து நாட்டைப் பாதுகாப்பதற்குப் பணியாற்றிய முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையணியில் சேவையாற்றும் அனைவரும் பெருமையுடனும் திறமையுடனும் சேவையாற்றுவதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்குத் தேவையான வசதிகள், சிறப்புரிமைகள் மற்றும் நலனோம்புகைகளை மேலும் வலுப்படுத்தி தேசிய பாதுகாப்பை மென்மேலும் வலுப்படுத்துவதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் என்பதை வலுயுறுத்திக் கூறுகிறேன்.
இளைஞர்கள் மற்றும் இளமைப் பருவம் பற்றி நாம் பல விடயங்களைப் பேசியிருந்த போதிலும் ஒரு தேசம் என்ற வகையில் இவர்களுக்குச் செய்த சேவை மிகவும் சொற்பமானதென்பதற்கு நாட்டில் வெடித்த இளைஞர் போராட்டங்கள் சான்றாக விளங்குகின்றன. இப்போராட்டங்களால் ஆயிரக்கணக்கான விலைமதிக்க முடியாத இளம் உயிர்களை நாடு இழந்தது. 1990ஆம் ஆண்டின் இளைஞர் விரக்தி ஆணைக்குழு அறிக்கையின் விதப்புரைகளில் சொற்ப அளவே இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனது அரசாங்கம், இவ்வறிக்கையின் விதப்புரைகளை மீள ஆராய்ந்து அவற்றை இன்றைய காலகட்டத்திற்குப் பொருந்தக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்தக்கூடிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ளும். இதற்கமைய, தொழில் வாய்ப்புக்களை வழங்குகின்றபோது அல்லது வேறு அரசாங்க தலையீடு தேவைப்படுகின்றபோது எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் எனது அரசாங்கம் இடமளிக்காதென்பதை நான் வலியுறுத்திக் கூறுகின்றேன்.
எளிதில் இடர்களை எதிர்நோக்கக்கூடிய சமூகக் குழுக்கள் தொடர்பில் நாம் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும். பெண்கள், சிறுவா்கள், வயோதிபர்களது சனத்தொகை மற்றும் அங்கவீனமுற்றவா்கள் இதில் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர். இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிக்கும்அதிகமானவர்களாகக் காணப்படும் பெண்கள் தேசிய பொருளாதாரத்திற்கும் சமூக நல்லிருப்புக்கும் உயரிய பங்களிப்பைச் செலுத்துகின்றனர். எனது அரசாங்கத்தின் சகல அபிவிருத்தி மூலோபாயங்களிலும் இவர்களது நலன் மற்றும் சுபிட்சத்தை முன்னிட்டு முக்கிய கவனம் செலுத்தப்படும்.
பிள்ளைகள் நாட்டின் எதிர்காலமாகும். இவர்களுக்கு மேலும் செழிப்பானதொரு எதிர்காலத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இவர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்கும் எனது அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தும் என்பதைக் கூற வேண்டும்.
பல்வேறு விதத்திலும் உடலூனமுற்றவர்கள் எம்மத்தியில் காணப்படுகின்றனர். இவர்களைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பைத் தவறாமல் நிறைவேற்றி, இவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மாதாந்த உதவு தொகைகளைச் சிரமமின்றியும் இவர்களது கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையிலும் தற்போதுள்ள கடுமையான ஒழுங்குவிதிகளை இயன்றளவு தளர்த்தியும் பெற்றுக்கொடுப்பதற்குத் துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே, இலங்கையின் பிரஜை என்ற வகையில் இந்நாட்டில் பிறக்கும் பிள்ளைகள் நவீன உலகை வெற்றிகொள்வதற்குள்ள பரந்த வாய்ப்பினைப் பார்க்கும்போது தமது இனம், மதம், பிரதேசம், தலைமுறை, பொருளாதார இயலுமை ஆகிய எதுவுமே இனியொருபோதும் அப்பிள்ளைகளுக்குத் தடையாக அமையக்கூடாது. அதாவது, ஒருவரிடமுள்ள தனித்துவத்தைப் பலவீனமாக்கி அதனை இல்லாதொழிப்பது அதன் கருத்தல்ல. ஆனால் நான் கவலையுடன் தெரிவிக்க வேண்டிய விடயம் யாதெனில், நவீன தேசமொன்றாக எழுச்சி பெறுவதற்குத் தடையேற்படுத்துகின்ற, சில மரபு வழியானதும் பிற்போக்கானதும் நிலமானிய ஆட்சிமுறைக் காலத்துக்குரியதுமான எச்சங்கள் இன்றுகூட எமது சமூகத்தில் எஞ்சியிருப்பதைக் காணக்கூடியதாயுள்ளதாகும். தமது குடும்பப் பெயர்களைப் பொது இடங்களில் உரத்துக் கூறும்போது சிலர் அசௌகரியத்துக்குள்ளாவதை நான் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன். இவ்வாறு எமது சகோதர மக்களை அசௌகரியத்துக்குட்படுத்தும் வகையில் அவர்களின் குடும்பப் பெயர்களைப் பாவிப்பதற்கு இடமளிப்பதானது, நவீன இலங்கையர் என்கின்ற அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்கு இடையூறாக அமையுமென நான் நம்புகின்றேன். எனவே, பொது இடங்களிலும் பொது ஆவணங்களிலும் குடும்பப் பெயர்களைக் குறிப்பிடவேண்டிய தேவையேற்படும்பட்சத்தில், குறித்த பெயருக்குரியவரின் விருப்பத்தின்பேரில் மாத்திரம் அதனை மேற்கொள்ள வேண்டுமென்பதோடு, யாரேனுமொருவர் அதை விரும்பவில்லையெனில், அவருடைய குடும்பப் பெயரை முதலெழுத்துக்களில் மாத்திரம் குறிப்பிடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு எனது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அதன் பிரகாரம் தனது குடும்பப் பெயரைப் பகிரங்கமாகப் பாவிப்பதற்குள்ள உரிமைக்கு இடையூறு ஏற்படாது. குறிப்பாக நான் இதனை 1956ஆம் ஆண்டில் ஏற்பட்ட முற்போக்கு சமூகப் புரட்சிக்கு தலைமையேற்ற பண்டாரநாயக்க அவர்களின் சமூக – சனநாயக தத்துவத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமொரு நடவடிக்கையாகவே பார்க்கிறேன்.
காலத்துக்கேற்ப, உலகம் மாற்றத்துக்குள்ளாவதற்கு அமைய உலகில் புதிய சவால்கள் தோன்றுகின்றன. புதிய சமூகப் பிரச்சினைகள் உருவாகின்றன. நாம் அச்சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் எமது பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்துக்கொண்டு புதிய நோக்குடன் பதிலிறுப்பதற்குத் தயாராதல் வேண்டும்.
இலங்கை ஏற்கெனவே போதைப் பொருள் பாவனை அதிகமாக உள்ள நாடாக மாறியுள்ளது. எமது நாட்டுப் பிள்ளைகளைப் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீட்கத் தவறுவோமானால் எமது எந்தவொரு எதிர்கால எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியாமல் போய்விடுமென்பதை வலியுறுத்த விரும்புகின்றேன். போதைப்பொருள் பாவனை வெறுமனே ஒரு சுகாதாரப் பிரச்சனை மட்டுமல்ல, எமது நாட்டின் சமூகப் பிரச்சனையாக மாறியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். புகையிலை, சிகரட் பாவனையைக் கட்டுப்படுத்துவதிலிருந்து சகலவிதமான போதைப்பொருள் பாவனையையும் கட்டுப்படுத்துவதற்கு எனது தலைமையின்கீழ் போதைப்பொருள் தடுப்புக்காக புதிதாக நாடு தழுவிய வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படுகின்றது.
கௌரவ சபாநாயகர் அவர்களே, இந்த நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென நீண்ட காலமாக புத்திஜீவிகளும் கல்விமான்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்தப் புதிய அரசியல் கலாசாரம் ஏற்படுத்தப்படுமென்ற உறுதிமொழியுடனேயே நான் சனவரி மாதம் 08ஆம் திகதி ஆட்சிக்கு வந்தேன் என்பதையும் நான் நினைவுகூர வேண்டும். முழுமையானதும் முன்மாதிரியானதுமான அரசியல்வாதியொருவரிடம் இருக்க வேண்டிய ஒழுக்கம், நற்பெயர், உயரிய ஆளுமை மற்றும் பண்புடன் கூடிய தலைவர்களைக்கொண்ட புதிய அரசியல் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
நாட்டின் பொதுமக்களும் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் வாழும் புத்திஜீவிகளும் எதிர்பார்த்த அந்தப் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான அத்திவாரம் தற்போது இடப்பட்டுள்ளது. இந்த நாட்டில் வளர்ந்துவரும் மேற்படி புதிய இணக்கப்பாட்டு அரசியல் சூழமைவுக்குள் நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டுக்கு உங்களுடைய நிபுணத்துவ அறிவையும் ஆற்றல்களையும் வழங்குமாறு நாட்டில் உள்ள சுதேச புத்திஜீவிகளையும் வெளிநாடுகளில் வாழும் இலங்கை புத்திஜீவிகளையும் வாஞ்சையுடன் அழைக்கின்றேன். குறிப்பாக, தனது தாய்நாட்டுக்குச் சேவை புரிவதற்கு என்னுடைய இந்த அழைப்பை ஏற்று நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாடுகளில் வாழும் புத்திஜீவிகளைச் செங்கம்பளம் விரித்து வரவேற்பதற்கும் அவர்களை இந்த நாட்டுக்கு அழைத்துவருவதை ஒருங்கிணைப்பு செய்யும்பொருட்டு என்னுடைய மேற்பார்வையின்கீழ் சிறப்புப் பணியகமொன்றைத் தாபிப்பதற்கும் என்னுடைய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும். அரசியல் ரீதியாக குழுக்களாகப் பிரிந்து நிற்காமல், நாட்டின் நலன் கருதி ஒற்றுமையுடன் செயற்படுவதற்கு உகந்த காலம் தற்போது தோன்றியுள்ளது என்பதை நான் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.
இறுதியாக, நான் ஒரு விடயத்தை வலியுறுத்த வேண்டும். இந்த நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல் இரண்டு பிரதான கட்சிகளினால் ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு கட்சி 35 வருடங்கள் இந்நாட்டை ஆட்சி செய்தது. மற்றைய கட்சி 32 வருடங்கள் இந்நாட்டை ஆட்சி செய்தது. ஒவ்வொருவருடைய காலத்திலும் செயற்படுத்திய விடயங்களைப் பற்றிக் குறைகூறிக்கொண்டு பகைமை அரசியலைக் கொண்டு நடத்துவதற்குப் பதிலாக, ஓர் இணக்கப்பாட்டு அரசியல் மரபினைக் கட்டியெழுப்புவதற்கு எனது பதவிக் காலத்தினுள் நான் மேற்கொள்ளும் திடமான முயற்சிக்கு, நாட்டினதும் தேசத்தினதும் நலனைக் கருத்திற்கொண்டு உங்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் அர்ப்பணிப்பினையும் நல்குமாறு நான் உங்களிடம் கௌரவமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
இன்றுமுதல் இந்த இரண்டு பிரதான கட்சிகளினதும் கூட்டிணைப்பினை அடிப்படையாகக்கொண்டு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகளினதும் இணக்கப்பாட்டுடனான ஒத்துழைப்பினைத் தற்போது கட்டியெழுப்பப்பட்டு வரும் நல்லரசியல் கலாசாரம் தொடர்ந்தும் உறுதிப்படுத்தப்படும் வகையில், நாட்டின் சுபிட்சத்துக்கும் முன்னேற்றத்துக்கும் எவ்விதத்தில் பயன்படுத்த முடியும் என்பதுகுறித்து தங்களது கவனத்தைச் செலுத்துமாறு நான் உங்கள் அனைவரிடமும் கௌரவமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி.
மும்மணிகளின் துணை!

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்