01 (8)

எமது நாட்டின் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி துறைகளின் முக்கிய திருப்புமுனையாக அமையக்கூடிய GSP+ சலுகையானது எதிர்வரும் வாரத்திலிருந்து நிரந்தரமாக இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

 

இன்று (06) முற்பகல் கண்டி, ஹல்ஒலுவ, தொடங்வல பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பாலத்தை மக்கள் உரிமைக்கு கையளிக்கும் நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றியபோதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

 

நாடு என்ற வகையில் முன்னோக்கி செல்வதற்கு காணப்பட்ட அனைத்து தடைகளையும் நீக்கி, அனைத்து நாடுகளுடனும் நட்புறவை ஏற்படுத்திக்கொள்வதற்கு கடந்த இரு வருடங்களில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் அனுகூலங்கள் தற்போது தாய் நாட்டிற்கு கிடைக்க ஆரம்பித்துள்ளன எனவும் இதன்போது ஜனாதிபதி அவர்கள் கருத்து தெரிவித்தார்.

 

அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது போலவே அதனுடன் நாட்டிற்கு கிடைத்துள்ள கடன் சுமை தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பாரியளவிலான கடன் உதவிகளைப் பெற்று பாரிய அபிவிருத்திக் கருத்திட்டங்களை செயற்படுத்தி பிரபல்யமடைவதற்கு தற்போதைய அரசினாலும் முடியுமானபோதிலும் அதனூடாக பாரிய கடன் சுமையினை நாட்டிற்கு உரித்தாக்கி நாட்டின் எதிர்காலத்தை இருளாக்குவதற்கு தனது அரசாங்கம் ஒருபோதும் தயராக இல்லை என்று வலியுறுத்திக் கூறிய ஜனாதிபதி அவர்கள், பாரியளவிலான கடன் சுமையினால் உலகின் ஏனைய சில நாடுகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பாக ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டு வரும் தவறான பிரசாரங்கள் தொடர்பாக இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்நாட்டின் ஒரு அங்குல நிலத்தையேனும் உலகின் வேறு எந்தவொரு நாட்டுக்கும் தாரைவார்த்துக் கொடுப்பதற்கு தமது அரசாங்கம் தயாராக இல்லை என்று கூறினார்.

 

கைத்தொழில் மற்றும் புதிய முதலீடுகள் நாட்டிற்கு அவசியமானபோதிலும் கூட இலங்கையின் அரசியலமைப்பிற்கும் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டே வெளிநாடுகளுக்கு காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஒரு சிலர் குறிப்பிடுவதைப்போல மக்களை அவர்களது வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றுவதற்கோ அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வணக்கஸ்தலங்களை உடைத்தெறியும் முறையற்ற செயல்களுக்கோ அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும்; ஜனாதிபதி அவர்கள் மேலும் கூறினார்.

 

வெளிப்படைத்தன்மையான உடன்படிக்கைகளே வெளிநாடுகள், வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்படும் எனவும் நாட்டின் அபிவிருத்திக்காக தற்போதைய அரசாங்கம் உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது எனவும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார்.

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கப்போவதாக சிலர் அறிக்கைகளை வெளியிட்டபோதும்  தமது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு யாராலும் முடியாது. 2020ஆம் ஆண்டில்; நடக்கும் தேர்தலில் வெற்றிபெற்று புதிய அரசாங்கத்தை அமைத்தாலொழிய அதற்கு முன்னர் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு யாருக்கும் எந்தவித வாய்ப்பும் இல்லை எனவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.

 

கண்டி நகரில் காணப்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வாக கட்டப்பட்ட இந்த பாலம் 105 மீற்றர் நீளத்தைக் கொண்டதுடன் இரண்டு வாகன பாதைகளைக் கொண்டது. பிரித்தானியாவின் இரும்பு பாலங்கள் கருத்திட்டத்தின் நிதியுதவியில் பிரதேச பாலங்கள் செயற்றிட்டத்தின் கீழ் 374 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பாலத்தினால், மாத்தளை, குருநாகல் போன்ற பிரதேசங்களிலிருந்தும், கண்டியை சூழவுள்ள பிரதேசங்களிலிருந்தும் பயணிக்கும் வாகனங்கள் கண்டி நகரை தவிர்த்து தமது போக்குவரத்துக்களை இலகுவாக மேற்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

அஸ்கிரிய மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர், அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, அப்துல் ஹலீம் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளிட்ட பல பிரதேச அரசியல் பிரதிநிதிகளும் பிரித்தானியாவின் உயர் ஸ்தானிகர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

02 (8) 03 (7) 04 (6) 07 (3) 08 (5)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்